சென்றவாரம் புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது எழுத்தாளர் கி,ராஜநாராயணனைச் சந்திக்கச் சென்றிருந்தோம். கிராவை சந்தித்துத் திரும்பினால் சொந்த ஊருக்குப் போய்த் திரும்பியது போலப் புத்துணர்வு வந்துவிடும். கிராவிடம் நான் கண்ட முக்கிய அம்சம் எவரைப் பற்றியும் புரணி பேசினாலோ, எதிர்மறையாகப் பேசினாலோ பிடிக்காது. வேண்டாத விஷயங்களை ஏன் பேசிகிட்டு என்று ஒதுக்கிவிடுவார். அது போலவே நன்றாகயில்லை என்று தோணுகிற விஷயத்தை நேரடியாகச் சொல்லிவிடுவார். யாரையும் துதி பாட மாட்டார். 96 வயதில் அவர் புதிய நாவலை எழுதியிருக்கிறார் என்பது சந்தோஷம் அளித்த்து. அந்த நாவலைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நாவல் வெளியாகட்டும் என்று புன்சிரிப்புடன் சொன்னார். கிராவின் மகன் பிரபி தற்போது ஒரு நாவல் எழுதியிருக்கிறார். கரிசல் மண்ணில் மறக்க முடியாத மனிதர்கள் என்ற அந்த நாவலை வாசிக்கும்படி எனக்கு அளித்தார். பாதிப் படித்திருக்கிறேன். மாடு வாங்கப் போன சம்சாரிகளின் கதை.அதில் வழிப்பறிக் கொள்ளயைர்கள் பற்றிச் சுவாரஸ்யமாக எழுத்தப்பட்டிருக்கிறது. நாவலை வாசிக்க வாசிக்க என் பால்ய காலம் நினைவில் ததும்பியது இப்படி மாடு வாங்குவதற்காகக் கன்னிசேரி சந்தைக்குப் போகிறவர்களுடன் நானும் போயிருக்கிறேன். மாடு பார்த்து வாங்குவது எளிதானதில்லை. இந்த நாவலில் மாட்டின் லட்சணம் எப்படியிருக்க வேண்டும் என்று அழகாகக் குறிப்பிட்டிருக்கிறார். கன்னிசேரி சந்தையில் மாடு பிடித்துக் கொண்டு அதை ஊருக்கு ஒட்டி வருவதற்காக இரவெல்லாம் நடப்போம். நட்சத்திரங்கள் பூத்த இரவில் நடந்து வருவோம். வழியெல்லாம் பேச்சு. புளியமரங்கள் அடர்ந்த பாதையின் நினைவும் வாசனையும் மனதில் எழுகின்றன. இன்று கிராமத்தில் மாடுகளே இல்லை. சமீபத்தில் சிவகாசி அருகேயுள்ள கிராம்ம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். ஊரில் காளைமாடுகளை இல்லை. மாட்டுதொழுவங்கள் இடிந்த நிலையில் இருந்தன, மாட்டை மேய்ச்சலுக்கு ஒட்டிச் செல்லும் பையன்களோ, ஆடு மேய்க்கும் சிறுமிகளோ கண்ணில் படவேயில்லை, ஒரு வீட்டின் வாசலில் மாட்டிற்குப் பருத்திக் கொட்டை அரைத்து வைக்கும் பெரிய கல்உரல் கிடந்த்து. அந்த உரலை ஆட்டிய வலிய கைகள் கொண்டவர்கள் இந்த உலகிலிருந்து மறைந்து போய்விட்டார்கள். மாடுகளுடன் ஆடுகளுடன் உறவில்லாத ஒரு தலைமுறை கிராமத்திலே உருவாகிவிட்டிருக்கிறது. தொடுதிரையை வாழ்க்கையாகக் கொண்ட தலைமுறைக்கு மாடுவிற்க, மாடு வாங்க சந்தைக்குப் போவது என்பது வெறும் தகவல். அதுவும் தேவையற்ற தகவல். காலூன்றி நிற்கும் நிலத்தை மறந்து ஆகாசத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். உலகமே நம் கைகளுக்குள் சுருங்கிவிட்டது. ஆனால் காலடியில் இருந்த உலகம் அழிந்து போவது நம் கண்ணில் படவேயில்லை. எத்தனை விதமான மாடுகள். அதன் வனப்பும் வலிமையும். எப்படிச் சொல்வது. விவசாய வேலைகளுக்கு மாடு தேவைப்பட்டது என்றாலும் மாடுகளைத் தன் சொந்தப்பிள்ளைகள் போலவே வளர்த்தார்கள். நேசித்தார்கள். மாட்டிற்கு நோய் வந்தால் கண்விழித்துப் பண்டுவம் பார்த்தார்கள். அந்த மனிதர்களும் இன்றில்லை. அந்தக் கிராமங்களும் இன்றில்லை. எத்தனையோ விதமான மூலிகைகள். நாட்டு மருந்துகள். எல்லாவற்றையும் காலம் அழித்துவிட்டது. வறுமை ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்த்து. அந்தப் பாடத்திலிருந்தே மனிதன் அடுத்த நிலைக்குச் செல்லும் வழியைக் கண்டறிந்தான். செல்வமும் செல்வாக்கும் வந்த போதும் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கண்டறிந்தான். அதைத் தன் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்தான். பெருநகரங்களில் இன்று பணத்தின் மதிப்பை சம்பாதிப்பவரும் உணரவில்லை. செலவு செய்பவரும் உணரவில்லை. அடிவானம் வரை விரிந்து கிடக்கும் கரிசலில் மாடுகளுடன் பேசியபடி உழுது கொண்டிருந்த விவசாயி இன்றில்லை. அவனில்லாத வெறுமை உணரப்படவேயில்லை. ஒற்றை ஆளாகக் கமலை இறைத்துத் தண்ணீர் பாய்ச்சிய ஆள் இன்று நகரில் ஐஸ்விற்பனை செய்பவனாகத் தள்ளுவண்டியை ஒட்டிக் கொண்டு செல்கிறான். தோட்டத்து வீடுகள் மறைந்துவிட்டன. வேப்பமரத்தடியில் வேப்பம்பழம் பொறுக்க வரும் சிறார்கள் மறைந்துவிட்டார்கள். கொடுக்காப்புளி மரமேறி கொடுக்காப்புளி பறிப்பவர் எவருமில்லை. மீன்பிடி தூண்டிலுடன் கண்மாயை நோக்கி செல்லும் சிறார் கூட்டத்தை இனி காண முடியாது. மண்புழு தேடி சிரட்டையுடன் எந்தச் சிறுவனும் வீட்டின் பின்புறம் அலைய மாட்டான். நிலாவைத் துரத்திக் கொண்டு ஒடும் சிறுமிகளையோ, இரவில் வீட்டுவாசலில் பாய் போட்டு தூங்கும் மனிதர்களையோ இனி காணவே முடியாது. காலம் மாறிவிட்டது. எவ்வளவு சிறிய வார்த்தை. எவ்வளவு பெரிய துக்கம். மாற்றத்தை மனது புரிந்து கொள்கிறது. ஆனால் இழந்த உலகின் மீதான தவிப்பை அது கைவிடுவதேயில்லை. பழைய ஏக்கம் என்று சிலர் கேலி செய்யக்கூடும். செய்யட்டும். நினைவில் வாழுகிறவன் அதைப்பற்றிச் சொல்லிக் கொண்டு தான் இருப்பான். அது உலகிற்கான உரையாடல் இல்லை தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் ஆறுதல்
0

You may also like

சாகித்ய அகாதமி விருது
வாழ்நாள் சாதனையாளர் விருது

admin